மூடுக

தோட்டக்கலைத்துறை

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை

 

தோட்டக்கலைப் பிரிவானது சமீப காலங்களில் இந்திய விவசாயத்தில் முக்கிய மற்றும் துடிப்பான ஒரு அங்கமாக உள்ளது.நாட்டின் ஊட்டச்சத்து பாதுகாப்பு வறுமை ஒழிப்பு மற்றும் வேலை வாய்ப்புகள் உருவாக்கத்தில் தோட்டக்கலையின் பங்கு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.இப்பிரிவு விவசாயிகளுக்கு மாற்று பயிர் சாகுபடி செய்வதற்கான வாய்ப்பினையும் பண்ணை நிலங்களை சிறந்த முறையில் பயன்படுத்தி அதிக லாபம் ஈட்டுவதற்கான வாயப்புகளையும் வழங்குவதோடு பெருமளவிலான புதிய வேலை வாய்ப்புகளை அளிக்கும் வேளாண் தொழிற்சாலைகள் நீடித்து இயங்கும் வாய்ப்பினை அளித்து வருகிறது. தோட்டக்கலைப் பயிரானது மாற்றுப்பயிர் சாகுபடிக்கு உகந்ததாகவும் இயற்கை வளத்தினை சிறந்த வகையில் பயன்படுத்தி கிராமப்புற மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு திறன் சார்ந்த வேலைவாய்ப்பினை வழங்குவதாகவும் அமைந்துள்ளது எனவும் கண்டறியப்பட்டுள்ளது.தோட்டக்கலை விளைபொருட்களின் தேவை அதிகரிப்புக்கு ஏற்ப இப்பயிர்களின் பரப்பு மற்றும் உற்பத்தி குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது.விவசாயிகளுக்கு மாற்று பயிர் சாகுபடி செய்வதற்கான வாய்ப்பினை தோட்டக்கலை வழங்குவது மட்டுமல்லாமல் சமீபத்திய தொழில்நுட்பங்களை கொண்டு உணவு பாதுகாப்பை பாதிக்காமல் வருமானத்தை அதிகரிக்க ஒரு மிகப்பெரிய வாய்ப்பினையும் அளிக்கிறது.கடந்த ஆண்டுகளில் தோட்டக்கலை பயிர்களின் பரப்பளவு ஒரு ஆண்டிற்கு 2.7 சதவீதத்திலும் மற்றும் ஆண்டு உற்பத்தி 7.0 சதவீதத்திலும் உயர்ந்துள்ளது.

“துளி நீரில் அதிகப்பயிர்” பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத் திட்டம்(பிரதம மந்திரி கிரிஷி சின்சாய் யோஜனா)

இணையதளம் மூலம் விண்ணப்பிக்க பதிவு செய்யவும்

Pradhan Mantri Krishi Sinchayee Yojana

விவசாயத்தில் பாசன நீர் அனைத்து விதங்களிலும் முக்கிய இடுபொருளாக திகழ்கின்றது.பாசன நீரின் அளவு நீர் பாய்ச்சும் நேரம் மற்றும் பாசன முறை ஆகியவை பயிர்களின் மகசூலலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் நுண்ணீர் பாசன தொழில்நுட்பம் தேவையான நீரை தேவையான இடத்தில் வழங்குவதற்கு உதவுகிறது.நுண்ணீர் பாசன தொழில்நுட்பம் பாசன நீர் பற்றாக்குறைக்கு நல்ல தீர்வாக விளங்குகிறது.இத்தொழில் நுட்பம் பாரம்பரிய நீர்ப்பாசன முறைகளை விட பயிர்களில் அதிக மகசூல் கிடைக்க வழி செய்கிறது.சீரான கால இடைவெளியில் அளவாக நீர் பாய்ச்சப்படுவதால் உற்பத்தி திறன் மற்றும் நீர் பயன்பாட்டுத்திறன் அதிகரிப்பதுடன் பணி ஆட்களின் செலவை கணிசமாக களை வளர்ச்சியினை கட்டுப்படுத்துகிறது.நுண்ணீர் பாசனத்தின் மூலம் நீர் வழி உரமிடுவதால் உரப் பயன்பாட்டு திறன் அதிகரிப்பதோடு தரமான விளைபொருளும் கிடைக்கிறது.தமிழகம் ஒரு தண்ணீர் பற்றாக்குறை மாநிலமாக இருப்பதால் நுண்ணீர் பாசன திட்டத்தினை அதிக தண்ணீர் தேவைப்படும் விவசாய மற்றும் தோட்டக்கலை பயிர்களான கரும்பு மற்றும் வாழை பயிர்களில் தீவிரமாக செயல்படுத்துவதில் அரசு கவனம் செலுத்துகிறது.நுண்ணீர் பாசன திட்டம் ”துளி நீரில் அதிக பயிர்” என்ற பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத் திட்டத்தின் உட்பிரிவின் கீழ் மத்திய மாநில அரசுகளுக்கிடையே 60:40 என்ற மானிய பங்களிப்பில் செயல்படுத்தப்படுகிறது. அகில இந்திய அளவில் தமிழகத்தில் மட்டுமே சிறு குறு விவசாயிகளுக்கு 100% சதவீத மானியமும் இதர விவசாயிகளுக்கு 75% சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. 2017-18ஆம் ஆண்டில் விவசாயிகளின் பொருளாதார சுமையை குறைக்க வேண்டி மாநில அரசு குறிப்பிடத்தக்க முயற்சிகள் எடுத்து நுண்ணீர் பாசன கருவிகளின் மீதான சரக்கு மற்றும் சேவை வரியினை அரசே ஏற்றுக்கொண்டுள்ளது.

நுண்ணீர் பாசனத்திட்டம் செயல்படுத்துவதற்காக 2017-18 ஆம் ஆண்டு முதல் ”நுண்ணீர் பாசன மேலாண்மை தகவல் அமைப்பு“ என்ற புதிய மென்பொருள் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.உபயோகிக்க எளிதாக இருப்பதால் விவசாயிகள் தாங்களாகவே பொது சேவை மையத்தில் இம்மென்பொருளின் மூலம் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்து கொள்ளலாம். இந்த மென்பொருளானது விவசாயிகள் எளிதாக தகவல்களை புரிந்து கொள்ளும் வகையில் தமிழ் மற்றும் ஆங்கிய மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது. திட்டத்தை செயல்படுத்தும் அலுவலர்களும் பயனாளிகளின் பதிவு முதல் இறுதியாக மானியம் விடுவிக்கப்படும் வரை கண்காணிக்கலாம். நுண்ணீர் பாசனத்திட்டத்தினை வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுத்த இம்மென்பொருள் உதவுகிறது.

தேசிய தோட்டக்கலை இயக்கம்

NHM mulching method

தமிழகத்தில் தேசிய தோட்டக்கலை இயக்கமானது தோட்டக்கலையில் ஒட்டுமொத்த வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கத்துடன் 2005-06 ஆம் ஆண்டு ல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. உயர் தொழில்நுட்ப பாதுகாக்கப்பட்ட சூழலில் பயிர் சாகுபடி செய்தல் அடர் நடவு முறைகள் உற்பத்திதிறன் குறைந்த பழைய தோட்டங்களை புதுப்பித்தல் தரமான நடவு பொருட்களை வழங்குதல் தேனீ வளர்த்தல் மூலம் மகரந்த சேர்க்கையை ஊக்குவித்தல் அறுவடை பின்செய் மேலாண்மைக்கான உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் இயந்திர மயமாக்குதல் மற்றும் விவசாயிகளுக்கு பயிற்சி ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தேசிய வோளண்மை வளர்ச்சித் திட்டம்

Onion Godown

முக்கிய பயிர்களின் உற்பத்தி திறனை உரிய தொழில்நுட்பங்கள் மூலம் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கத்துடன் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டமானது 60:40 என்ற விகிதத்தில் மத்திய மாநில அரசு பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் திட்டமாகும்.2018-19ஆம் அண்டில் கூடுதல் வருமானத்தை உருவாக்கும் இனங்களை செயல்படுத்தவும் புதிய தோட்டங்களை உருவாக்குதல் தோட்டக்கலை பயிர்களின் பரப்பு விரிவாக்கம் வெங்காய வளர்ச்சி திட்டம் வீட்டுத் தோட்ட காய்கறி தளைகள் விநியோகம் செய்தல் போன்ற இனங்களில் 88.75 இலட்சம் நிதியில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பெருநகர காய்கறி வளர்ச்சித் திட்டம்

இத்திட்டமானது 2011-12ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு விவசாயிகள் மற்றும் நுகர்வோர்களுக்கு இடையிலான இடைவெளியினை குறைக்கவும் நகர்புற மக்களுக்கு தரமான காய்கறிகள் குறைந்த விலையில் கிடைக்கவும் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்க செய்யும் நோக்கிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் பரப்பு விரிவாக்கம் மற்றும் விவசாயிகள் பயிற்சி ஆகிய இனங்களில் 93.50 இலட்சம் அளவில் நிதி இலக்கு பெறப்பட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நீடித்த நிலையான வேளாண்மைக்கான தேசிய இயக்கம்

நீடித்த நிலையான வேளாண்மைக்கான தேசிய இயக்கம் அந்தந்தப் பகுதிகளின் பருவ நிலைக்கு உகந்த ஒருங்கிணைந்த பண்ணைய முறைகளை கடைப்பிடித்து வேளாண்மையை நீடித்த நிலையான மற்றும் இலாபகரமான தொழிலாக மாற்றும் உன்னதக் குறிக்கோளை கொண்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் மானாவாரி பகுதி மேம்பாடு மற்றும் பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம் ஆகிய உப திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மானாவாரி பகுதி மேம்பாடு

Rainfed Area Development

மானாவாரி பகுதி மேம்பாட்டின் முக்கியமான நோக்கமே ஒருங்கிணைந்த பண்ணைய முறைகளான பலஅடுக்கு சாகுபடி பயிர் சுழற்சி ஊடுபயிர் கலப்பு பயிர் போன்ற சாகுபடி முறைகளை கடைப்பிடிப்பதுடன் இதர செயல்பாடுகளான தோட்டக்கலை, கால்நடை வளர்ப்பு,மீன் வளர்ப்பு,வேளாண் காடுகள், தேனீ வளர்ப்பு,மரமல்லாத வனப்பொருட்கள் உற்பத்தி ஆகியவற்றை ஒருங்கிணைத்து செய்வதன் மூலம் விவசாயிகள் அதிக மற்றும் நிலையான வருமானம் பெறுவதுடன் வறட்சி வெள்ளம் மற்றும் இதர பேரிடர்களிலிருந்து பாதுகாக்கவும் வழி வகுக்கிறது.இத்திட்டம் மத்திய மற்றும் மாநில அரசுகளின் பங்களிப்புடன் (60:40 என்ற விகிதத்தில்) செயல்படுத்தப்படும் திட்டமாகும்.நடப்பு 2018-19ஆம் நிதியாண்டில் 71.95 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் தோட்டக்கலை சார்ந்த பண்ணையம் பாதுகாக்கப்பட்ட பயிர் சாகுபடி மண்புழு உர உற்பத்தி பயிற்சி மற்றும் செயல்விளக்கம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம்

பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம் இயற்கை வேளாண்மையை ஊக்குவித்து எளிய சான்றளிப்பு முறையான விவசாயக்குழுக்களில் பங்கேற்பு உத்திரவாத சான்றிதழ் எனப்படும் சான்றுடன் அங்கக விளைப்பொருட்களை உள்ளுர் சந்தைகளில் சந்தைப்படுத்தும் திட்டமாகும். இத்திட்டம் மத்திய அரசின் பங்காக 60 சதவீதமும் மாநில அரசின் பங்காக 40 சதவீத நிதியடனும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது மூன்றாண்டு தொடர் திட்டமாகும்.இத்திட்டம் 2015-16ஆம் ஆண்டில் தோட்டக்கலை பயிர்களில் சான்றளிப்புடன் கூடிய இயற்கை வேளாண்மை சாகுபடியை 3 வட்டாரங்களில் 150 எக்கர் பரப்பளவில் மேற்கொள்ள தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் நச்சுப்பொருட்கள் பகுப்பாய்வு பயிர் சாகுபடி நிலத்தினை இயற்கை வேளாண்மைக்கு மாற்றுதல் தழைச்சத்தினை மண்ணில் நிலைப்படுத்தக்கூடிய செடிகளை வளர்த்தல் வேளாண் இயந்திரங்கள் வாடகை செலவினம் இயற்கை விளைபொருட்களை சிப்பமிடுதல் பெயரிடுதல் மற்றும் வர்த்தக குறியீடு ஆகியவற்றிற்கு 4.95 இலட்சம் நிதியுதவி வழங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீன மயமாக்குதல் திட்டம் (தோட்டக்கலை)

தமிழ்நாடு பாசன வேளாண்மையை நவீனமயமாக்கல் திட்டம் உலக வங்கி நிதியுடன் தமிழ்நாடு அரசினால் செயல்படுத்தப்படும் ஓர் பல்நோக்குத் திட்டமாகும். தேர்வு செய்யப்பட்ட உபநீர் வடிநில பகுதிகளில் அதிக நீர்த் தேவைப்படும் பயிர்களில் இருந்து குறைந்த நீர்த்தேவைப்படும் அதிக வருவாய் தரக்கூடிய தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடியை உயர் தொழில்நுட்பங்கள் மற்றும் நீர் மேலாண்மை தொழில் நட்பங்களை பயன்படுத்தி தீவிரபடுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தில் கடனா மற்றும் கீழ் தாமிரபரணி உபவடிநில பகுதிகளில் 426.08 இலட்சம் நிதி அளவில் பயிர் செயல் விளக்கங்கள் நஞ்சற்ற காய்கறி சாகுபடி நுண்ணீர் பாசனத்தை ஊக்குவித்தல் பருவ நிலை மாற்றத்திற்கு உகந்த பாதுகாக்கப்பட்ட சூழலில் சாகுபடி மற்றும் நிலப்போர்வை ஆகிய புதிய தொழில் நுட்பங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தோட்டக்கலை பயிர்களில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத்திட்டம்

தமிழகத்தில் ஏற்கனவே நடைமுறையில் இருந்த தேசிய வேளாண்மை பயிர் காப்பீட்டுத் திட்டம் விலக்கி கொள்ளப்பட்டு 2016 காரீப் பருவம் முதல் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அறிவிக்கை செய்யப்பட்ட தோட்டக்கலை பயிர்களான வாழை மரவள்ளி வெங்காயம் மற்றும் மிளகாய் ஆகியவற்றிற்கு அறிவிக்கை செய்யப்பட்ட வருவாய் கிராமம் அளவில் காப்பீடு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.நடப்பு 2018-19ஆம் ஆண்டில் (காரீப் மற்றும் ராபி பருவத்தில்) 50% பரப்பு தோட்டக்கலை பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது

தோட்டக்கலை பயிர்களில் கூட்டுப் பண்ணையம்

சிறு மற்றும் குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் அவர்களை ஒருங்கிணைத்து கூட்டுப் பண்ணைய முறையை ஊக்குவித்தல் ஒருங்கிணைந்த கடன் வசதி பெறுதல் சிறந்த தொழில்நுட்ப முறைகளை பின்பற்றுதல் முன் மற்றும் பின் சந்தை இணைப்பு தொடர்புகளை ஏற்படுத்துதல் முதலியவற்றை மேற்கொள்வதற்கான உன்னத திட்டத்தினை தமிழக அரசு 2017-18ஆம் ஆண்டில் சட்டப் பேரவையில் நிதி நிலை அறிக்கையில் அறிவித்தது.2017-18ஆம் ஆண்டில் தோட்டக்கலைத் துறையின் மூலம் 10 உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் அமைக்கப்பட்டன. நடப்பு 2018-19ஆம் ஆண்டிலும் தோட்டக்கலை துறையின் மூலமாக 10 உற்பத்தியாளர் குழுக்கள் அமைக்கப்படவுள்ளன.

புதிய அரசு தோட்டக்கலைப் பண்ணை (வன்னிக்கோனேந்தல்)

தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் (2014-15) 2 கோடி நிதி இலக்கீடு பெறப்பட்டு தென்காசி மாவட்டம் வன்னிக்கோனேந்தல் வட்டாரம் கிராமத்தில் புதிய அரசு தோட்டக்கலைப் பண்ணையின் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதில் உயர்தொழில்நுட்பங்களான நிழல்வலைக் குடில் பசுமைக்குடில் அடங்கிய மாதிரிப் பண்ணையாக அமைக்கப்பட்டு வருகிறது.விவசாயிகளுக்கு மானியம் மற்றும் முழு விலையில் கன்றுகள் வழங்குவதற்காக 6.00.0 ஹெக்டர் பரப்பளவில் எலுமிச்சை, மா, கொய்யா ஒட்டுக்கன்றுகள் மற்றும் பதியன் கன்றுகள் உற்பத்திக்காக தாய் மரங்கள் நடவு மேற்கொள்ளப்பட இருக்கிறது.மேலும் 1.10.0 ஹெக்டர் பரப்பளவில் மா, கொய்யா, நெல்லி பழத்தோட்டங்கள் அமைக்கப்பட உள்ளது.2018-19ம் ஆண்டில் தக்காளி மற்றும் கத்தரி குழித்தட்டு நாற்றுகள் 10 லட்சம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் பூங்கா குற்றாலம்

Bridge in eco park

குற்றாலம் அரசு தோட்டக்கலைப் பண்ணை 37.23 ஏக்கர் பரப்பளவில் 1959-ம் ஆண்டு முதல் தென்காசி மாவட்டத்தில் இயங்கி வருகிறது.இப்பூங்காவானது ஐந்தருவியில் இருந்து ½ கிலோ மீட்டர் தூரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது.சிறுவர்களுக்கான விளையாட்டு அரங்கமும்,நீர்வீழ்ச்சியும்,கற்சிலைகளும் சிமெண்ட் கலவையால் உருவாக்கப்பட்ட சிலைகளும் அழகிய ஓடுகளுடன் கூடிய நீண்ட நடைபாதைகளும் உணவு கூடமும் நீர்வீழ்ச்சியினை ரசித்துக் கொண்டே நடந்து செல்லும் முறையில் நடைபாதைகளும் சிறியவர்களும் பெரியவர்களும் கண்டு மகிழும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது.ஐந்தருவிக்கு தண்ணீர் வரும் நீர்வீழ்ச்சியினை ரசித்துக் கொண்டே நடந்து செல்லும் முறையில் மரத்தாலான நடைபாதையும் பார்வை கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளது.நடந்து செல்லும் பாதைகளின் ஒருபுறம் அழகான புல்தரைகள் மறுபுறம் கல்லினால் வடிவமைக்கப்பட்ட சிலைகள்,சங்க கால நிகழ்வுகள்,மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற காட்சிகளுடன் கூடிய சிமெண்ட் பாதைகளும் கண்டு மகிழும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப படிவங்கள்
இணைப்பு / வடிவம் விண்ணப்ப படிவ விபரங்கள்
இணைப்பு-அ 1,2 திட்டத்திற்கான விண்ணப்ப படிவம்
இணைப்பு-ஆ நிழல்வலை குடில், நிலபோா்வை, பந்தல்க்கான விண்ணப்ப படிவம்
இணைப்பு-இ 3 திட்டத்திற்கான விண்ணப்ப படிவம்
இணைப்பு-ஈ 4 திட்டத்திற்கான விண்ணப்ப படிவம்
வடிவம்-1 சிப்பம் கட்டும் அறைக்கான விண்ணப்ப படிவம்
வடிவம்-2 நிழல்வலைக்குடில், பசுமைக்குடில், நிலப்போா்வைக்கான விண்ணப்ப படிவம்
வடிவம்-3 சேமிப்புக் கிடங்கிற்கான விண்ணப்ப படிவம்