மூடுக

நிகழ்வுகள் மற்றும் திருவிழாக்கள்

அருள்மிகு காசிவிசுவநாத சுவாமி திருக்கோயில் தென்காசி

தென்காசியில் திருவோலக்கம் செய்யும் உலகம்மை உடனுறை காசி விசுவநாதரைப் போற்றி அழகிய திருச்சிற்றம்பலக் கவிராயர் புராணம் பாடி கொல்லம் ஆண்டு 1030ல் உலகம்மை சந்நிதியில் அரங்கேற்றியுள்ளார். இது கி.பி.1855 ஆம் ஆண்டிற்குச் சமமானதாகும் நகரச் சிறப்பில் தென்காசி நகரத்தின் சிறப்பினை ஆசிரியர் பேசுகின்றார். பாண்டிமா தேவியின் குளிர்ந்த முகம் போல் தென்காசி காட்சி தருகிறது என்கிறார். தென்காசி நகாpல் வாழும் மக்கள், அரசு வீதி, பாண்டியன் அமைத்த எட்டுத் திருமடங்கள், செண்பகப் பொழில், சிவன்கோயில் அனைத்தையும் பேசுகின்றார்.
இந்நகரம் தல விசேடமும், தீர்த்த விசேடமும் மூர்த்தி விசேடமும் பெற்றது என்கிறார். பாண்டிய மன்னன் ஆட்சி செய்தது. அவன் ஆட்சி செய்த ஆண்டு, அவன் கோயில் அமைத்தது, கோயிலுக்கு நிலங்கள் கொடுத்த ஊர்களின் பெயர், தென்காசியின் எல்லை, இலஞ்சி, குன்னக்குடி, தஞ்சாவு+ர், செண்பகராம பாண்டியன் நல்லுார், வீரசிகாமணி போன்ற பல்வேறு ஊர்களில் நிலங்களை மன்னன் கோயிலுக்கு வழங்கிய செய்தி அனைத்தும் சொல்லப்பட்டுள்ளன. காவிரியின் வடக்கு கரையிலும், தெற்கு கரையிலும் உள்ள பாடல்பெற்ற தலங்களைவிட தென்காசி சிறப்பு வாய்ந்தது என்று பாடுகின்றார். பாண்டிய நாட்டு பதினான்கு தலங்களும் தொண்டை நாட்டு தலங்களும் இதற்கு இணையாகாது என்று புகழ்ந்து பேசுகிறார்.

முக்கியதிருவிழாக்கள்

  • சித்திரை விசுத் திருநாள்
  • ஐப்பசி விசுத் திருநாள்
  • மார்கழி திருவாதிரை திருநாள்

அருள்மிகு திருக்குற்றாலநாதசுவாமி திருக்கோயில், குற்றாலம்

திருக்குற்றாலம் என்ற அடைமொழியோடு வழங்கும் புகழ் பெற்ற சிவத்தலம் தென்காசி மாவட்டத்தில், தென்காசி வட்டத்தில், தென்காசியிலிருந்து தென்மேற்கில் 6 கி.மீ தூரத்தில் உள்ளது. திருக்குற்றாலம் தென்னாட்டில் விளங்கும் புகழ்மிக்க தலங்களில் ஒன்றாகும். கோடையின் கொடுமையைத் தவிர்த்துக்கொள்ளத் தமிழக மக்களுக்கு இறைவனால் அளிக்கப்பெற்ற குளிர்வாசத் தலமாகவும் இவ்வூர் விளங்குகிறது. இங்குள்ள மலையிலிருந்து சூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை வீசும் சாரல் (இளமழை) இவ்வூருக்குத் தனிப்பெருமை தந்து வருகிறது. தமிழகத்தின் தனிச்சிறப்புக்குரிய தென்றற்காற்று குற்றால மலையில்தான் தோன்றுகிறது. இங்குள்ள மலைக்குத் திரிகூடமலையென்று பெயர். மலையடி வாரத்தில் கோயிலும் அருவியும் உள்ளன. பிள்ளையார், லிங்கம், விமானம், மலை, அருவி ஆகிய ஐந்தையும் காண்பது சிறப்பு. இங்குள்ள மலை மூன்று சிகரங்களைக் கொண்டுள்ளதால் திரிகூட மலை என வழங்கப்படுகிறது. இறைவர் மலையடிவாரத்திலுள்ளதால் திரிகூடநாதர் என்ற பெயரால் வழங்கப் பெறுகிறார். ஊர் கடல் மட்டத்திலிருந்து 550 அடி உயரத்திலுள்ளது. மலை உயரம் 5000 அடிகளாகும். இவ்வூரில் தோன்றிப்பெருகிவரும் ஆறு சித்ராநதி எனப்; பெயர் பெறும். திருக்குற்றாலத்து அருவி நீர் புகழ் பெற்றது. மலையின் மேல் 100 அடி உயரத்திலிருந்து விழும் முதல் அருவிக்குத் தேனருவி என்று பெயர். அதற்கு அடுத்த நிலையில் 30 அடி உயரத்திலிருந்து விழுவதைச் செண்பகாதேவி அருவி எனக் கூறுவர். அடுத்து நிலப்பகுதியில் 288 அடி உயரத்தில் விழும் அருவியைப் பொங்குமாக்கடல் என்பர். மலை முகடுகளில் மூலிகைகள் மீது படிந்து வருவதால் இவ்வருவிநீர் குளிப்பதற்கு ஆரோக்கியமானது என எல்லோரும் விரும்பி நீராடுவர். பாதுகாப்பாக நீராடுவதற்கு வசதிகள் உள்ளன. குற்றாலத்தின் பிறிதோரிடத்தில் ஐந்து பிரிவுகளோடு விழுவதை ஐந்தருவி என்பர். ஐந்தருவி விழும் இடத்திலும் நீராடுவோர் பாதுகாப்பாகக் குளிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன. திருக்குற்றாலத்திற்குக் கிழக்கே ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பாசுபத சாஸ்தா அருவியும் (புலி அருவி) குளிப்பதற்கு நல்ல இடமாகும். திருக்குற்றாலம் சிவத்தலமாக விளங்குவதோடு உடல் நலத்தைக் காக்கும் ஆரோக்கியத் தலமாகவும் உள்ளது. இவ்வூர் மேற்குத் தொடர்ச்சி மலையில் ஆரியன் காவுக் கணவாய் பக்கத்தில் இருப்பதால் அக்கணவாய்க்கு மேற் பக்கம் எழுகின்ற தென்மேற்குப் பருவக்காற்றும் மழையும் இக்கணவாய் வழியே வந்து குற்றாலத்தைக் குளிர்விக்கின்றன. வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி மாதங்களில் இக்காற்றும் மழையும் குற்றாலத்தை நோக்கி வந்து இளமழையையும், இளங்காற்றையும் தந்து மக்கட்கு இதமளிக்கின்றன. இப்பருவத்தைச் சாரற்பருவம் எனக் கூறுகின்றனர். சாரற் காலத்தில் குற்றாலம் திருவிழாக் கோலம் கொண்டிருக்கும். ஏராளமான மக்கள் குற்றாலத்தில் தங்கி அருவியாடிக்களிக்கின்றனர். சாரற்காலத்தில் இங்கு நீராடுவதால் சரும நோய்கள் தீரும். மூளை நோய் நீங்கும். பசி உண்டாகும். உடல் நலம் அடையும். இத்தகைய சிறப்புமிக்க இயற்கைச் சூழலில், பேரருவியின் அருகில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.

முக்கிய திருவிழாக்கள்

சித்திரை விசுத் திருநாள், ஐப்பசி விசுத் திருநாள், மார்கழி திருவாதிரை திருநாள் மற்றும் ஆடி அமாவாசை பத்திர தீபத் திருநாள்