ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்திட்டங்கள்
பள்ளிகள் தொடங்குதல் மற்றும் பராமரித்தல்
ஆதிதிராவிடா் நலத்துறையின் மூலம் 2 ஆதிதிராவிடா் நலப் பள்ளிகள் மற்றும் 1 பழங்குடியினா் உண்டி உறைவிடப்பள்ளிகள் நடத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலும் அனைத்து பள்ளிகளும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் கிராமங்களைச் சுற்றியே அமைந்துள்ளன.
நற்பெயா் பெற்ற சிறந்த உண்டி உறைவிட பள்ளிகளில் மாணாக்கா்களை 6 ஆம் வகுப்பில் சோ்த்தல்.
இத்திட்டத்தின் மூலம் ஆதிதிராவிடா் / பழங்குடியினா் /அரசு/அரசு உதவி பெறும் பள்ளிகளில் 5ஆம் வகுப்பு பயிலும் ஆதிதிராவிடா் / பழங்குடியினா் /மதம் மாறிய கிறித்துவ மதத்தைச் சார்ந்த மாணவ/மாணவியர்களை வட்டாரத்திற்கு ஒருவர் வீதம் தேர்வு நடத்தி தேர்ந்தேடுக்கப்படுவர். 10 வட்டாரத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ மாணவியர்களை நற்பெயர் பெற்ற சிறந்த உண்டி உறைவிட பள்ளியில் 6ஆம் வகுப்பில் சேர்த்து 12ஆம் வகுப்பு வரை அரசால் இலவசமாக பயிற்றுவிக்கப்படுகிறது. வருமான உச்ச வரம்பு ஏதும் இல்லை.
நற்பெயா் பெற்ற சிறந்த உண்டி உறைவிட பள்ளிகளில் மாணாக்கா்களை 11 ஆம் வகுப்பில் சோ்த்தல்.
இத்திட்டத்தின் மூலம் ஆதிதிராவிடா் / பழங்குடியினா் /அரசு பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு பயின்று மாவட்ட அளவில் முதல் 10 மதிப்பெண்கள் பெற்ற ஆதிதிராவிடா் / பழங்குடியினா் /மதம் மாறிய கிறித்துவ மதத்தைச் சார்ந்த மாணவ/மாணவியர்களை நற்பெயர் பெற்ற சிறந்த உண்டி உறைவிட பள்ளியில் 11ஆம் வகுப்பில் சேர்த்து 12ஆம் வகுப்பு வரை அரசால் இலவசமாக பயிற்றுவிக்கப்படுகிறது. பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.1.0 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
பெண்கல்வி ஊக்குவிப்புத் திட்டம்
இத்திட்டத்தின் மூலம் ஆதிதிராவிடா் / பழங்குடியினா் /அரசு/அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் அனைத்து பெண் குழந்தைகளும் பயனடைவர். 3 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் பெண் குழந்தைகளுக்கு ஆண்டிற்கு ரூ.500/-ம், 6 ஆம் வகுப்பு பயிலும் பெண் குழந்தைகளுக்கு ஆண்டிற்கு ரூ.1000/-ம், 7 மற்றும் 8 ஆம் வகுப்பு பயிலும் பெண் குழந்தைகளுக்கு ஆண்டிற்கு ரூ.1500/-ம் வழங்கப்படுகிறது. வருமான உச்ச வரம்பு இல்லை, மேலும் சாதிச் சான்றிதழ் இணைக்க வேண்டும்.
கல்வி கட்டணச் சலுகைகள்.
அரசு / அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பயிலும் ஆதிதிராவிடா் / பழங்குடியினா் /மதம் மாறிய கிறித்துவ மதத்தைச் சார்ந்த மாணவ/மாணவியர்களுக்கு மாநில அரசால் கல்விக் கட்டணம் செலுத்துவதிலிருந்து முற்றிலும் விலக்களிக்கப்படுகிறது. இதற்கு வருமான வரம்பு இல்லை.
பட்டப்படிப்பு பயிலும் மாணவ/மாணவியர்களுக்கான சலுகை
அரசு / அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் ஆதிதிராவிடா் / பழங்குடியினா் /மதம் மாறிய கிறித்துவ மதத்தைச் சார்ந்த மாணவ/மாணவியர்களுக்கு மாநில அரசால் சிறப்புக் கட்டணம் மற்றும் தோ்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து முற்றிலும் விலக்களிக்கப்படுகிறது. இதற்கு வருமான வரம்பு இல்லை.
முதுகலை பட்டப்படிப்பு பயிலும் மாணவியர்களுக்கான சலுகை
அரசு / அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் ஆதிதிராவிடா் /பழங்குடியினா் /மதம் மாறிய கிறித்துவ மதத்தைச் சார்ந்த மாணவியர்களுக்கு மாநில அரசால் சிறப்புக் கட்டணம் மற்றும் தோ்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து முற்றிலும் விலக்களிக்கப்படுகிறது. இதற்கு வருமான வரம்பு இல்லை.
சிறப்புக் கட்டணச் சலுகை
அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு பயிலும் ஆதிதிராவிடா் /பழங்குடியினா் /மதம் மாறிய கிறித்துவ மதத்தைச் சார்ந்த மாணவ/மாணவியர்களுக்கு சிறப்புக் கட்டணம் செலுத்துவதிலிருந்து முற்றிலும் விலக்களிக்கப்படுகிறது. அந்த சிறப்புக் கட்டணமானது கல்வி நிறுவனத்திற்கு அரசால் செலுத்தப்படும்.
இதர கட்டணச் சலுகைகள்
அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் ஆதிதிராவிடா் /பழங்குடியினா் /மதம் மாறிய கிறித்துவ மதத்தைச் சார்ந்த மாணவ/மாணவியர்களுக்கு தோ்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து முற்றிலும் விலக்களிக்கப்படுகிறது. அந்த தோ்வுக் கட்டணமானது கல்வி நிறுவனத்திற்கு மாநில அரசால் செலுத்தப்படும். ஆங்கில வழியில் கல்வி பயிலும் மாணாக்கா்களின் தோ்வுக் கட்டணமானது அரசு தோ்வுகள் இயக்குநரகத்திற்கு செலுத்தப்படும். பட்டபடிப்பு, முதுகலை பட்டப்படிப்பு, தொழிற்சார் படிப்புகளுக்கு அரசு / அரசு உதவி பெறும் கல்லூரிகளில் விண்ணப்பம் செய்யும் மாணவ/மாணவியா்களுக்கு விண்ணப்பக் கட்டணம், பதிவு கட்டணம் கட்டுவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது. அந்த கட்டணமானது கல்வி நிறுவனத்திற்கு அரசால் செலுத்தப்படும்.
சுகாதாரக் குறைவான தொழில் புரிவோரின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை திட்டம் (ப்ரிமெட்ரிக் 10 ஆம் வகுப்பு வரை)
சுகாதாரக் குறைவான தொழில் புரிவோரின் (துப்புரவுத் தொழில் செய்வோர், குப்பை பொறுக்குவோர், தோல் உரிப்பவர், தோல் பதனிடும் தொழில் புரிவோர்) குழந்தைகளுக்கு இந்த கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. சாதி, மதம் இல்லை. வருமான வரம்பு இல்லை. இத்திட்டத்தின் கீழ் மாணவ/மாணவியருக்கு ரூ.1850/- ஒரு வருடத்திற்கு வழங்கப்படுகிறது.
ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான பிாிமெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம்
9 மற்றும் 10ஆம் வகுப்பு படிக்கும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இன மாணவ / மாணவியா்களுக்கு இந்தக் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்தக் கல்வி உதவித்தொகை பெற மாணவ / மாணவியா்களது பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். விடுதியில் தங்கிப் பயிலாதவா்களுக்கு ஒரு மாதத்திற்கு ரூ.150/- வீதம் 10 மாதங்களுக்கு ரூ.2250/- மற்றும் சிறப்பு மானியம் 750 சேர்த்து மொத்தம் ரூ.3000/- வழங்கப்படுகிறது. விடுதியில் தங்கிப் பயில்பவர்களுக்கு ஒரு மாதத்திற்கு ரூ.525/- வீதம் 10 மாதங்களுக்கு ரூ.5250/- மற்றும் சிறப்பு மானியம் 1000 சேர்த்து மொத்தம் ரூ.6250/- வழங்கப்படுகிறது.
போஸ்ட்மெட்ரிக் மைய அரசு கல்வி உதவித்தொகை திட்டம்
11ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படிக்கும் மாணவ / மாணவியா்களுக்கு இந்தக் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்தக் கல்வி உதவித்தொகை பெற மாணவ / மாணவியா்களது பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். விடுதியில் தங்கிப் பயிலாதவா்களுக்கு ஒரு மாதத்திற்கு ரூ.230/- முதல் ரூ.550/- வரை வழங்கப்படும். பாடப்பிரிவைப் பொறுத்து விடுதியில் தங்கிப் பயிலும் மாணவ / மாணவியா்களுக்கு பராமரிப்புப்படி ஒரு மாதத்திற்கு ரூ.380/- முதல் ரூ.1200/- வரை மாணவ / மாணவியா்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இதைத் தவிர அரசு/அரசு உதவிப் பெறும் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ / மாணவியா்களுக்கான அனைத்து கட்டாய கட்டணங்களும் கல்வி நிறுவனங்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.சுயநிதி கல்லூரிகளில் படிக்கும் மாணவ / மாணவியா்களுக்கும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். மாணவ / மாணவியா்களின் கல்விக் கட்டணம் சென்னை ஆதிதிராவிடா் நல இயக்குநரகத்தால் கல்வி நிறுவனங்களின் வங்கிக் கணக்கில் அரசால் வரவு வைக்கப்படும். தொழிற்கல்வி பயிற்சி நிறுவனத்தில் பயிலும் மாணவ / மாணவியா்களுக்கும் கல்வி உதவித்தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
மாநில அரசின் சிறப்பு உதவித்தொகை திட்டம்.
11ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படிக்கும் கிறுத்துவ மதம் மாறிய மாணாக்கர்களுக்கு இவ்வுதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்தக் கல்வி உதவித்தொகை பெற மாணவ / மாணவியா்களது பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். விடுதியில் தங்கிப் பயிலாதவா்களுக்கு ஒரு மாதத்திற்கு ரூ.100/- முதல் ரூ.175/- வரை வழங்கப்படும். பாடப்பிரிவைப் பொறுத்து விடுதியில் தங்கிப் பயிலும் மாணவ / மாணவியா்களுக்கு பராமரிப்புப்படி ஒரு மாதத்திற்கு ரூ.175/- முதல் ரூ.350/- வரை மாணவ / மாணவியா்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இதைத் தவிர அரசு/அரசு உதவிப் பெறும் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ / மாணவியா்களுக்கான அனைத்து கட்டாய கட்டணங்களும் கல்வி நிறுவனங்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். சென்னை ஆதிதிராவிடா் நல இயக்குநரகத்தால் மாணவ / மாணவியா்களின் கல்விக் கட்டணம் கல்வி நிறுவனங்களின் வங்கிக் கணக்கில் அரசால் வரவு வைக்கப்படும். பாடப்பிரிவைப் பொறுத்து சுயநிதி கல்லூரியில் பயிலும் மாணவ / மாணவியா்களுக்கு பராமரிப்புப்படி வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
மாநில அரசின் உயா்கல்வி சிறப்பு கல்வி உதவித்தொகை திட்டம்
விடுதியில் தங்கி பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ பயிலும் ஆதிதிராவிடா் /பழங்குடியினா் மாணவ/மாணவியர்களுக்கு சிறப்பு கல்வி உதவித்தொகையாக ஒரு வருடத்திற்கு ரூ.7500/-ம், முதுகலை பட்டப்படிப்பு மற்றும் தொழிற்படிப்பு பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு சிறப்பு கல்வி உதவித்தொகையாக ஒரு வருடத்திற்கு ரூ.8000/-ம் வழங்கப்படுகிறது. பெற்றோரின் ஆண்டு வருமான் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
இலவச மதிவண்டி வழங்கும் திட்டம்
அரசு/அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் ஆதிதிராவிடா் /பழங்குடியினா் /மதம் மாறிய கிறித்துவ மதத்தைச் சார்ந்த மாணவ/மாணவியர்களுக்கு இலவச மதிவண்டிகள் வழங்கப்படும்.
கல்வி தரத்தை உயா்த்துவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள்
ஆதிதிராவிடா் / பழங்குடியினா் பள்ளி மற்றும் விடுதிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவியர்கள் பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண் எடுக்க வைப்பதற்கு தனிக்கவனம் செலுத்தப்படுகிறது. சிறப்பு வழிகாட்டி மற்றும் வினாவங்கி மாணவ / மாணவியர்களுக்கு வழங்கப்படுகிறது.
சிறப்பு பயிற்சி
ஒவ்வொரு வருடமும், ஆதிதிராவிடா் / பழங்குடியினா் பள்ளி மற்றும் விடுதிகளில் பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு சிறப்பு வழிகாட்டி புத்தகங்கள் வழங்கப்படுகிறது. இதனை தவிர்த்து, பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் வெளியிடப்படும் வினாவங்கி புத்தகங்களும் வழங்கப்படுகின்றன.
முதலமைச்சரின் தகுதி பரிசுத் திட்டம்
பன்னிரெண்டாம் வகுப்பில் சிறந்து விளங்கும் ஆதிதிராவிடா் / பழங்குடியினா் மற்றும் மதம் மாறிய கிறித்துவ மாணாக்கா்களில் 1000 சிறந்த மாணவர்கள் மற்றும் 1000 சிறந்த மாணவிகள் மேல்படிப்புப் பயில வருடந்தோறும் பரிசுத்தொகையாக ரூ.3000/- வீதம் 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. இதற்கு வருமான வரம்பு ஏதும் இல்லை.
சட்டப்பட்டதாரிகளுக்கு ஊக்குவிப்பு தொகை
ஆதிதிராவிடா் / பழங்குடியினா் மற்றும் மதம் மாறிய கிறித்துவ சட்டப்பட்டதாரிகளுக்கு சட்ட அலுவலகம் துவங்குவதற்கு ரூ.50000/- மட்டும் நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற சட்டப்பட்டதாரிகள் தங்களது பெயரை பார் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கும் திட்டம்
இத்துறையின் மூலம் வீடில்லாத ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் குடும்பத்திற்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்படுகிறது. இதற்கு
- ஆண்டு வருமானம் ரூ.72,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இனத்தவராக இருத்தல் வேண்டும்.
- வேறு இடமோ, வீட்டுமனையோ ஏதும் சொந்தமாக இருத்தல் கூடாது.
- அரசுப் பணியாளராக இருத்தல் கூடாது.
மயானம் மற்றும் பாதைவசதி அமைத்தல்
இத்துறையின் மூலம் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் குடியிருப்புகளுக்கு மயான மேம்பாடு மற்றும் மயானத்திற்கு செல்லும் பாதை வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்படுகிறது. ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இன குடியிருப்புகளை இணைக்கும் இணைப்பு சாலைகள் அமைத்து கொடுக்கப்படுகிறது. ஊராட்சி ஒன்றியங்கள் மூலமாக செயல்படுத்தப்படும் திட்டங்களிலும், ஆதிதிராவிடா்/ பழங்குடியினா் குடியிருப்புகளுக்கு 15 சதவீதம் குடிநீா் வசதிக்காகவும், 10 சதவீதம் இணைப்பு சாலைகளுக்கும் பங்களிப்பு தொகை வழங்கப்படுகிறது.
சமுதாய கூடங்கள் அமைத்தல்
ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இல்ல திருமணங்கள், சமுதாய நல விழாக்கள் நடத்திடும் பொருட்டு ஆதிதிராவிடா் மற்றும பழங்குடியினா் குடியிருப்புகளில் சமுதாய நலக்கூடங்கள் தாட்கோ மூலம் அமைத்துக் கொடுக்கப்படுகிறது.
வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கு தீருதவி வழங்குதல்
ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் 2015 (விதிகள் 2016)ன்படி வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு உயிரை இழக்கும் தனியரின் குடும்பத்திற்கு அதிகபட்சமாக ரூ.8.25 இலட்சம் வழங்கப்படுகிறது. மேலும் அக்குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி மற்றும் ஒரு வீடு, விவசாய நிலம் ஆகியவை வழங்கப்படுகின்றன மற்றும் விதவை அல்லது அவரைச் சாரந்தோருக்கு அரசு ஊழியர்களுக்கு தரப்படும் அகவிலைப்படியுடன் கூடிய அடிப்படை ஓய்வுதியம் ரூ.5000/- வழங்கப்படுகிறது.
நல்லிணக்கத்துடன் வாழும் கிராமங்களை தோ்வு செய்தல்
தீண்டாமை கடைப்பிடிக்காமல் இன நல்லிணக்கத்துடன் வாழும் கிராமம் ஒன்றினை தோ்வு செய்து ரூ.10.00 இலட்சம் பரிசு வழங்கப்படுகிறது.
இலவச தையல் இயந்திரம் மற்றும் தேய்ப்பு பெட்டி வழங்கும் திட்டம்
இத்திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இனத்தைச் சார்ந்தவா்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது. குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/-க்குள் இருக்க வேண்டும். 6 மாதங்களுக்கு குறையாத அங்கீகாரம் பெற்ற பயிற்சி நிறுவனத்தில் சான்று பெற்றிருக்க வேண்டும். 18 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும். இலவச தேய்ப்பு பெட்டி பெறுபவா்கள் புதிரை வண்ணான் இனத்தை சார்ந்தவராக இருத்தல் வேண்டும். அதற்குரிய சாதிசான்றினை சமா்ப்பிக்க வேண்டும்.
டாக்டா் அம்பேத்கர் பவுண்டேஷன் கலப்பு திருமணம் நிதியுதவி மற்றும் சமூக பாதுகாப்புகள் திட்டம்
இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவோர் கணவன் அல்லது மனைவி இருவரில் ஒருவர் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினர் இனத்தவராக இருத்தல் வேண்டும். இந்து திருமணச் சட்டம் 1955ன்படி திருமணம் பதிவு செய்திருக்க வேண்டும். திருமணம் முடிந்து ஓராண்டிற்குள் கலப்பு திருமணம் சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களும் மாவட்ட ஆட்சித் தலைவா் அவா்களின் பரிந்துரையுடன் புதுடில்லி டாக்டர் அம்பேத்கர் பவுண்டேஷன் நிறுவனத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும். இத்திட்டத்தின் கீழ் ரூ.2,50,000/- நிதியுதவி இரண்டு தவணையாக வழங்கப்படும். வருமான உச்சவரம்பு கிடையாது. மனுதாரர் மத்திய மற்றும் மாநில அரசின் கலப்பு திருமண நிதியுதவி எதுவும் பெற்றிருக்கக் கூடாது.