இந்து சமய அறநிலையத்துறை
அருள்மிகு திரு இலஞ்சி குமாரர் திருக்கோயில், இலஞ்சி
- பொது ஆண்டு 14ஆம் நூற்றாண்டில், மாறவர்மன் குலசேகரப்பாண்டியன் என்னும் மன்னனால் செப்பனிடப்பட்டு, கட்டுவிக்கப்பட்ட திருக்கோயில்.
- அருணகிரிநாதரால் பாடப் பெற்றத் திருத்தலம்.

அருள்மிகு காசிவிசுவநாத சுவாமி திருக்கோயில், தென்காசி
- ஓங்குநிலை ஒன்பதுற்ற திருக்கோபுரமும், பாங்கு பதினொன்று பயில் தூணுங் கொண்ட தென்காசி திருக்கோயில்.
- தென்காசிப் பாண்டிய மன்னர் அரிகேசரி ஜடிலாவர்மன் பராக்கிரமப் பாண்டியரால், அவரது ஆட்சியாண்டு இருபத்தைந்தில், பொது ஆண்டு 06.05.1446ல் கட்டத் தொடங்கப்பட்டு, 10.07.1447ல் மன்னரால் கட்டிமுடிக்கப்பட்டது இத்திருக்கோயில்.
- இத்திருக்கோயில் உருவாவதற்கு முன்பு, தென் ஆரிநாடு என அழைக்கப்பட்ட இவ்வூர், காசிவிசுவநாத சுவாமியின் ஆலயம் அமையப்பெற்றதால், தென்காசி எனப் பெயர் பெற்றது.
அருள்மிகு குற்றாலநாத சுவாமி திருக்கோயில், குற்றாலம்

- சங்க இலக்கியங்களில் பாடப்பெற்ற திருத்தலம்.
- வைணவத் திருத்தலமாய் இருந்து அகத்திய முனிவரால் சைவத் திருத்தலமாக மாற்றப்பட்ட திருக்கோயில்.
- சைவ சமயக் குரவர்களில் முதல்வரான திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற திருத்தலம்.
- மேலும் சைவ சமய குரவர்களான சுந்தரர் மற்றும் மாணிக்கவாசகர் ஆகியோர் பாடிப்பரவிய திருத்தலம்.
- அருணகிரிநாதர் பாடியுள்ள திருத்தலம்.
- தமிழகத்தில் நடராஜப்பெருமான் நடனமாடிய ஐந்து சபைகளுள் “சித்திர சபை” அமையப்பெற்ற திருத்தலம்.

சித்திர சபை, திருக்குற்றாலம்
- தமிழகத்தில் நடராஜப்பெருமான் நடனமாடிய ஐந்து சபைகளுள் ஒன்று “சித்திர சபை”.
- மூலிகை வண்ணங்கள் கொண்டு தீட்டப்பட்ட நடராஜபொருமானின் சித்திர வடிவத் திருக்கோலம், திருக்குற்றாலத் திருக்கோயில் தலபுராணம், முருகப் பெருமானின் 16 வடிவங்கள் மற்றும் விநாயகப்பெருமானின் 15 வடிவங்கள் போன்ற பல அரிய ஓவியங்கள் கொண்ட இச்சபை 15ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த பராக்கிரமப்பாண்டியனால் அமைக்கப்பட்டது.

அருள்மிகு கைலாசநாத சுவாமி திருக்கோயில், வீரசிகாமணி
- திருக்கோயில் கட்டுமானக் கலையின் பரிணாம வளர்ச்சி நிலைகளுள் ஒன்றானக் கற்றளிகள் உருவாக்கத்தின் தொடக்கக் காலமான 6ஆம் நூற்றாண்டு வாக்கில் மலையைக் குடைந்து உருவாக்கப்பட்ட முற்காலப் பாண்டியர் காலத்துக் குடைவரைக் கோயில்.
- இத்திருக்கோயிலில் அமையப்பெற்றுள்ள விநாயகர் உருவம் தமிழ்நாட்டில் அமையப்பெற்றுள்ள மிகப்பழமையான விநாயகர் உருவங்களுள் ஒன்றாகும்.

அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோயில், சங்கரன்கோயில்
- சைவ, வைணவ சமய ஒற்றுமையை உணர்த்தும் வண்ணம் சிவனும், விஷ்ணுவும் இணைந்து சங்கரநாராயணராகக் காட்சிதரும் திருத்தலம்.
- 10ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இத்திருக்கோயில், நிலநடுக்கோட்டிற்கு நேரே சூரியன் பிரகாசிக்கும் தினங்களான மார்ச் 21, 22, 23 மற்றும் செப்டம்பர் 21, 22, 23 ஆகிய தினங்களில் அதிகாலைச் சூரிய ஒளிக்கதிர்கள் மூலவரான சங்கரலிங்க சுவாமி மீது படும் வண்ணம் கட்டப்பட்ட கோயில் கட்டடக் கலையின் அற்புதங்களுள் ஒன்று.
- தமிழ் ஆண்டின் ஆடி மாதத்தில், இத்திருக்கோயிலின் இறைவியான கோமதி அம்மன் மேற்கொள்ளும் தவக்காட்சி (ஆடித்தபசு) லட்சக்கணக்கான பக்தர்களை ஈர்க்கும் நிகழ்வாகும்.
- தென்பாண்டி நாட்டின் பஞ்சபூதத் தலங்களுள் மண் தலம் இத்திருக்கோயில்.

அருள்மிகு வில்வநாத சுவாமி திருக்கோயில், கடையம்
- மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் வயல்வெளிகளுக்கு நடுவே அமையப்பெற்ற இயற்கை எழில் சூழ்ந்த திருக்கோயில்.
- மகாகவி சுப்பிரமணிய பாரதியார், “காணிநிலம் வேண்டும்” என்று பராசக்தியை பாடித் தொழுதத் திருத்தலம்.

அருள்மிகு பரமகல்யாணி உடனுறை சிவசைலநாத சுவாமி திருக்கோயில், சிவசைலம்
- மேற்கு பார்த்த சிவாலயம்.
- நான்கு புறங்களில் இருந்தும் தரிசிக்கும் வகையில் அமைக்கப்பெற்ற ஜடாமுடி தரித்த சிவலிங்கம்.
- நான்கு கரங்களுடன் கூடிய மூலவர் அன்னை பரமகல்யாணி.
- சிற்பக்கலையின் தலைவன் எனக் கருதப்படும் மயனால் உருவாக்கப்பட்டதாக வணங்கப்படும் அழகிய நந்தி.

அருள்மிகு திருமலைக்குமார சுவாமி திருக்கோயில், பண்பொழி
- சங்ககால வேளிர்களில் ஒருவரான ஆய்அண்டிரன் ஆட்சி செய்த மலையானக் கவிரமலை என்று கருதப்படும் திருத்தலம்.
- அருணகிரிநாதரால் பாடல் பெற்றத் திருத்தலம்.
- இயற்கை எழில் சூழ்ந்த மேற்குத் தொடர்ச்சி மலைகளை ஒட்டி குன்றின் மீது அமைந்துள்ள சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த திருக்கோயில்.

அருள்மிகு சிந்தாமணிநாத சுவாமி திருக்கோயில், வாசுதேவநல்லூர்

- 14ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட திருக்கோயில்.
- சிவாலய மூலவர் திருமேனி லிங்க வடிவில் அல்லாது உமையொருபாகனாய் , அர்த்தநாரீஸ்வர வடிவில் வழிபடக்கூடிய திருக்கோயில். தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டிற்கு அடுத்தபடியாக மூலவர் அர்த்தநாரீஸ்வர வடிவில் காணப்படும் திருக்கோயில்.
அருள்மிகு நரசிங்கப் பெருமாள் திருக்கோயில், கீழப்பாவூர்
- சோழர்கள் காலத்தில் 10ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட திருக்கோயில்.
- மூலவர் 16 திருக்கரங்களுடன் இரணியனை வதம் செய்த கோலத்தில் அருளும் திருக்கோயில்.