மூடுக

பிரபல நீர்வீழ்ச்சிகள்

குற்றாலம்

தென்காசி மாவட்டத்தில் உள்ள சிறப்பு நிலை பேரூராட்சி ஆகும். குற்றாலம் கடல் மட்டத்தில் இருந்து 160 மீட்டர் அதாவது 520 அடி உயரத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இந்த மலையானது சிற்றாறு மணிமுத்தாறு பச்சையாறு மற்றும் தாமிரபரணி ஆகிய ஆறுகளின் பிறப்பிடமாகும்.

Main Falls

குற்றாலம் நகரத்தின் மக்கள் தொகை சுமார் 2368. இதனை ஏழைகளின் சொர்க்க என்று அழைப்பார்கள். காரணம் மிக குறைந்த செலவில் இந்த சுற்றுலாத் தலத்தை கண்டு ரசிக்க முடியும். குற்றாலம் நீர்வீழ்ச்சிக்கு சென்று வர மிக அருமையான மாதங்கள் ஜூன் முதல் செப்டம்பர் வரை மற்றும் அக்டோபர் முதல் ஜனவரி வரை. இக்காலகட்டத்தில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பொழிவதால் அருவி பகுதிகளில் எப்பொழுதும் நீர் ஆர்ப்பரித்து கொட்டிக்கொண்டிருக்கும். குற்றாலத்தை பற்றிய குறிப்பு சங்ககால இலக்கியங்களிலும் உண்டு. அருவியில் குளிப்பதற்காக சிறப்பு நிலை பேரூராட்சியின் மூலம் சிறப்பு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. ஆண்கள் மற்றும் பெண்களுக்கு முறையே தனித்தனியாக குளிப்பதற்கு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. இந்நகரத்தில் நூற்றுக்கணக்கில் தங்கும் விடுதிகள் உள்ளன. இங்கு உள்ள உணவு பெரும்பாலும் தென்னிந்தியாவின் உணவு வகையில் சார்ந்தே இருக்கும். அருகில் உள்ள மாவட்ட தலைநகரமான தென்காசியில் தங்கும் விடுதிகள் உள்ளன.

குற்றாலத்தை ஒட்டி அதிகப்படியான அருவிகள் காணப்படுகின்றன. குறிப்பாக மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, செண்பகாதேவி அருவி, தேனருவி, புலியருவி, சிற்றருவி, பழத்தோட்ட அருவி மற்றும் பாலருவி காணப்படுகின்றன. மேலும் குண்டாறு அணை பகுதியை ஒட்டி அருவிகளும் அதிகமாக உள்ளன. வனப்பகுதிக்குள் வருகின்ற அருவிகள் வனத்துறையினர் கட்டுப்பாட்டில் வருகின்றன.

மெயின் அருவி

மெயின் அருவி அல்லது பிரதான அருவி பேருந்து நிலையத்தின் மிக அருகிலேயே உள்ளது. இது சுமார் 50 மீட்டர் அகலம் உடையது மற்றும் 300 அடிக்கு மேல் உயரம் கொண்டது. இதனை பார்ப்பதற்கு மிக அருமையாக இருக்கும். இது குற்றாலநாதர் ஆலயத்தின் அருகில் அமைந்துள்ளது. ஆலயத்தின் அருகிலேயே வாகனங்களை நிறுத்தும் வசதியும் உள்ளன. இந்த அருவி குற்றாலம் சிறப்புநிலை பேரூராட்சி மூலம் நிர்வகிக்கப்படுகின்றது. அனைத்து அடிப்படை வசதிகளும் சுற்றுலா பயணிகளுக்கு செய்து தரப்பட்டுள்ளன. அருவிக்கு செல்லும் வழி நெடுகே கடைகள் நிறைந்து காணப்படுகின்றன. இந்த கடைகள் குற்றாலம் சீசன் காலங்களில் 24 மணி நேரமும் திறந்திருக்கும்.

Five Falls

ஐந்தருவி

பெயருக்கேற்ப இந்த அருவியில் ஐந்து பிரிவுகளாக பிரிந்து காணப்படுகின்றன. அது பார்ப்பதற்கு கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

இவ்வருவி பிரதான அருவியில் இருந்து அல்லது பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் நான்கு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையின் உள்ளே வளைந்து நெளிந்து செல்லும் சாலை வழியாக செல்ல வேண்டும். சுhலை வசதிகள் மிக அருமையாக உள்ளன. இது சுற்றுச்சூழல் பு+ங்கா அருகில் அமைந்துள்ளதால் குற்றாலத்திற்கு வருகின்ற அனைத்து சுற்றுலாப் பயணிகளும் இவ்வருவிக்கு வந்து செல்கின்றனர்.

pazhathottaaruvi

பழத்தோட்ட அருவி

பழத்தோட்ட அருவி ஐந்தருவி அருகிலேயே அமைந்துள்ளது. இவ்வருவிக்கு சுற்றுலா பயணிகள் அனைவருக்கும் அனுமதி வழங்கப்படுவதில்லை. காரணம் இது வனப்பகுதியின் உள்ளே வருகின்றது. சிறப்பு அனுமதி பெற்றே செல்ல இயலும். தற்போது பாதுகாப்பு காரணம் கருதி அந்த அனுமதியும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்வருவி ஐந்தருவியில் மேலே பாய்ந்து வருகின்றது. இவ்வருவி மிக அடர்ந்த காட்டுக்குள் மற்றும் பழங்கள் காய்க்கும் மரங்கள் சூழ்ந்துள்ள இடங்களில் நடுவே பாய்ந்து வருவதால் இதற்கு பழத்தோட்ட அருவி என்று பெயர் ஆகிவிட்டது. அருவிக்கு செல்லும் பாதை மிகவும் அடர்த்தியான வனப்பகுதி என்பதால் பாதுகாப்பு காரணம் கருதி தற்பொழுது பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை.

chitraruvi Falls

சிற்றருவி

சிற்றருவி வனப்பகுதிக்குள் வருகின்றது. எனவே இவ்வருவியினை வனத்துறையினர் பராமரித்து வருகின்றனர். இது பொது மக்களுக்கு என்று ஜூலை-19 2019 முதல் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இது வனப்பகுதியின் உள்ளே அமைந்துள்ளதால் காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும். இது பிரதான அருவியில் இருந்து மிக அருகிலேயே அமைந்துள்ளது. பிரதான அருவியில் வாகனங்களை விட்டு நடந்து செல்வது எளிமையாக இருக்கும். இது மிகச்சிறிய அருவி. எனவே குறைந்த எண்ணிக்கையிலேயே நபர்கள் செல்வர். இது மிகவும் பாதுகாப்பாகவும் சிறியதாகவும் இருப்பதால் இவ்வருவியில் குழந்தைகள் விரும்பி குளிக்கின்றனர்.

Honey Falls

தேனருவி

தேனருவி கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இவ்வருவியானது செண்பகாதேவி அருவியை தாண்டி செல்லும் வழியில் உள்ளது. இது மிக அடந்த வனப்பகுதியின் உள்ளே உள்ளது. முழுமையாக வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனை மலை ஏற்றம் பயிற்சி உடையவர்கள் மட்டுமே சென்று அடைய முடியும். செல்லும் வழியில் தேன்கூடுகள் காணப்படுவதால் இதற்கு தேனருவி என்ற பெயர். இது மிக சிறிய அருவி பாதுகாப்பு காரணம் கருதி தற்போது சுற்றுலா பயணிகள் இங்கு செல்ல அனுமதி வழங்கப்படுவதில்லை.

Shenbagadevi

செண்பகாதேவி அருவி

இவ்வருவி செண்பகாதேவி ஆலயத்தின் அருகில் அமைந்துள்ளது. குற்றாலநாதர் ஆலயத்தில் திருவிழா நடக்கும் பொழுது இவ்வாலயத்தில் இருந்து விழா தொடங்குகிறது. எனவே இவ்வாலயத்தின் அருகிலுள்ள அருவிக்கு செண்பகாதேவி அருவி என்று பெயராயிற்று. முழுமையாக களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் கட்டுப்பாட்டில் அமைந்துள்ளதால் வன விலங்குகளின் பாதுகாப்பு கருதி இங்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி வழங்கப்படுவதில்லை. இவ்வருவி வனப்பகுதியின் நுழைவாயிலில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொவில் உள்ளது.

Tiger Falls

புலியருவி

புலியருவி பழைய குற்றாலம் செல்லும் பாதையில் உள்ளது. இது பிரதான அருவியில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இது செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு அருவி. இங்கு அதிக மழைப்பொழிவு காணப்படுகின்ற சமயத்தில் மட்டுமே நீர் வருகின்றது. மிகவும் பாதுகாப்பான ஒரு அருவி. சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு அனுமதி உண்டு.

old courtallam

பழைய குற்றாலம்

பிரதான அருவியில் இருந்து சுமார் எட்டு கிலோ மீட்டர் அம்பை செல்லும் பாதையில் அமைந்துள்ள மிக கம்பீரமான அருவி. பழைய குற்றாலம் செல்லும் வழி முழுவதும் மலைகளும் மரங்களும் வயல்வெளிகளும் சூழ்ந்துள்ளதால் செல்லும் வழி நெடுக மிக அருமையாக இருக்கும். பழைய குற்றாலத்தில் குழந்தைகளுக்கு என்று 2 நீச்சல் குளங்கள் உள்ளன. எனவே குழந்தைகள் மிகவும் விரும்பி குளிக்கச் செல்லுகின்றனர்.

இவ்வருவி வனத்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கே வாகனங்கள் நிறுத்தும் வசதிகள் உள்ளன. பழைய குற்றாலம் அருவியை சுற்றிலும் செல்லும் வழியில் சுற்றுலா பயணிகளை கவருவதற்காக கடைகள் உள்ளன.